கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

மாயமாகும் மெகாபைட்டுகள்!

Posted by Clement மேல் ஜனவரி 11, 2013


நண்பர் மிகவும் சூடாக இருந்தார்! கணினி பற்றிய புலமை தனக்கு ஓரளவு உண்டு என்று எண்ணிக் கொண்டிருந்தவருக்கு இப்படி ஒரு அவமானம் நேர்ந்திருக்கக் கூடாதுதான்!

விஷயம் வேறொன்றும் இல்லை, தன் மகளுக்காக புதிதாக லேப்டாப் ஒன்று வாங்கி இருந்தார். 750 ஜி.பி. ஹார்டு டிஸ்க்குடன். வீட்டிற்கு வந்து விண்டோஸில் பார்க்கும் பொழுது, அளவு குறைவாக இருப்பதுபோல் தோன்றவே, காய்கறி கடையில் அளவு குறைவாக கொடுத்து ஏமாற்றுவது போல் ஹார்ட் டிஸ்க் விஷயத்திலும் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்று எண்ணி உடனே விற்பனையாளருடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.

“நீங்கள் விளம்பரப்படுத்தியிருந்த அளவைவிட குறைவான அளவுடைய ஹார்டு டிஸ்க்கை கொடுத்திருக்கிறீர்களே..” என்று இவர் கேட்க, “விண்டோஸில் குறைவாகத்தான் சார் காண்பிக்கும், ஆனால் சொல்லப்பட்ட அளவு உள்ளே இருக்கும்”, என்று விற்பனையாளர் சமாளிக்க, “எனக்கு உபயோகப்படாத அளவு உள்ளே இருந்து என்ன பயன்? அதற்கும் சேர்த்தல்லவா பணம் கொடுக்கிறேன்..” என்று இவர் பொரிந்து தள்ள, அடுத்த முனையில் இருந்தவர் கடைசி அஸ்திரமாக ”அதெல்லாம் கொஞ்சம் டெக்னிக்கலான விஷயம் சார் உஙகளுக்குச் சொன்னால் புரியாது” என்று சொல்ல.. அவ்வளவுதான்!

தான் இதுவரை தனது சகாக்களிடம் பிரகடனப் படுத்திக் கொண்டிருந்த கணினிப் புலமையின் பெருமையெல்லாம் ஒரு நொடியில் தவிடு பொடியானது போல் உணர்ந்தார். உடனே தொலைபேசியை துண்டித்து விட்டு மிகவும் சூடாக கணினி தயாரித்த நிறுவனத்தின் தொலைபேசி எண்ணைத் தேடிக்கொண்டிருந்தார்.

இந்த நேரம் பார்த்துதான் நான் சென்றிருந்தேன்!

நடந்ததையெல்லாம் கூறி என்னிடம் ஒரு குறை அழுது தீர்த்தார். ”ஏதோ ஒரு சில எம்.பி கணக்கிலே குறைஞ்சிருந்தா கூட பரவாயில்லை போனால் போகிறது என்று விட்டு விடலாம், சொளையா ஐம்பது ஜி.பி கொறையுதே… எம்.பி இல்லே சார்! ஜி.பி!! புரியுதா? ஐம்பது ஜி.பி. குறையுது. அந்தக் கம்பனியோடே பேசி இரண்டுலெ ஒண்ணு பாக்காம விடமாட்டேன் பாருங்க..” என்றார்.

அவரைப் பார்க்க எனக்கு சற்று பாவமாக இருந்தது. ஆம். இந்தக் கணக்கு ரொம்ப நாட்களாகவே கணினி உபயோகஸ்தர்களிடம் ஒரு குழப்பமாகவே இருந்து வருகின்றது. நண்பருக்கு இந்த குழப்பத்தை தீர்க்கும் விதமாக ஒரு விளக்கம் அளித்தேன். இதோ அந்த விளக்கம் உங்களுக்கும் தான்!

கிலோ, மெகா என்பதெல்லாம் டெசிமல் சிஸ்டத்தின் அடிப்படையில் அமையப் பெற்றவை. கிலோ என்பது 10மடங்கு அதாவது 10 x 10 x 10 = 1000 மடங்கு.

உதாரணத்திற்கு, ஒரு கிலோமீட்டர் என்பது ஆயிரம் மீட்டர். ஒரு கிலோகிராம் என்பது ஆயிரம் கிராம்.

கணினியோ பைனரி சிஸ்டத்தின் அடிப்படையில் இயங்குகிறது. 10 x 10 என்பது சாத்தியமில்லை. 2 x 2 என்றுதான் கணிக்க வேண்டும். அதனால் ஆயிரத்திற்கு சராசரியாக நமக்கு கிடைப்பது 210  அதாவது 1024.

ஆரம்பகால கணினி மென்பொருள் தயாரிப்பாளர்களும் அப்போதைக்கு வேறு வழியில்லாமல் 1024 பைட்டுகளை ஒரு கிலோ பைட்டு என்று கூறினர். புதிதாக சாஃப்ட்வேர் பயின்றவர்கள், கணினியைப் பொறுத்த மட்டில் கிலோ என்றால் 1000 அல்ல 1024என்று போதிக்கப் பட்டனர்.

ஆனால் வன்பொருள் தயாரிப்பாளர்களுக்கோ சற்று குழப்பம். அதிகார பூர்வமாக கிலோ என்றால் 103 மடங்கு மற்றும் மெகா என்றால் 106 மடங்கு தானே? அதனால் 1000,000 பைட்டுக்களை சேமிக்கும் திரன் கொண்ட பொருளை ஒரு மெகாபைட் கொள்ளும் திரன் கொண்டது என்றுதானே அறிவிக்க வேண்டும்? என்று எண்னினர். அதனால் ஒரு சிலர் கிலோ என்றால் 1024 என்றும், வேறு சிலர் மெகா என்றால் 1000,000 என்றும் கணக்கிட்டனர்.

ஆரம்ப கால கணினி உபயோகஸ்தர்களுக்கும் இந்த வித்யாசம் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால், ஒரு காலகட்டத்திற்கு மேல் கொள்ளும் திறனானது கிகாபைட்டுகள் கணக்கில் கூடிப் போகவே, தொழில்நுட்ப வல்லுனர்கள் ஒன்றுகூடி குழப்பத்தை தீர்க்க முனைந்தனர். அதன்படி, 1998ஆம் வருடம், பைனரி அளவுகளில் பெருக்கல்களை குறிக்க பிரத்யேக குறியீடுகளை அறிவித்தனர்.

டெசிமல் >>> பைனரி

கிலோபைட் – KB – 103  >>> கிபைபைட் – KiB – 210

மெகாபைட் – MB – 106  >>> மெபைபைட் – MiB – 220

கிகாபைட் – GB – 109   >>> ஜிபைபைட் – GiB – 230

இப்படியே டெரா, பெடா என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதற்குப் பின் வன்பொருள் தயாரிப்பாளர்கள், MB, GB, என்கின்ற குறியீடுகளுடன் டெசிமல் கணக்கையே கையாண்டனர். பிரத்யேகமாக பைனரி கணக்கில் அறிவிக்க வேண்டும் என்றால் MiB, GiB என்கின்ற குறியீடுகளை பயன்படுத்தினர்.

இப்பொழுது நம் நண்பரின் ஹார்டு டிஸ்கு கணக்கிற்கு வருவோம். 750 GB என்று ஹார்டு டிஸ்கு தயாரிப்பாளர் அறிவித்திருந்தது டெசிமல் கணக்கில். அதாவது 750 x 109 = 750,000,000,000 பைட்டுகள்.

நண்பரின் விண்டோஸ் பதிப்பு கணக்கிடுவது பைனரியில். அதாவது 750,000,000,000 பைட்டுகளை விண்டோஸ் 750,000,000,000 / 230 அதாவது 698.491931 GiB என்று கணக்கிடும். நண்பர் 50 ஜி.பி. மாயமாகிவிட்டது என்று ஏன் நினைத்தார் என்று புரிகிறதா?

இதில் ஒரே ஒரு குழப்பம் என்னவென்றால் நண்பரின் விண்டோஸ் பதிப்பில் GiB முறையில் கணக்கிட்டு விட்டு,  GiB என்ற குறியீட்டை உபயோகப்படுத்தாமல் GB என்றே அறிவிப்பது தான்!

இதே உபுண்டு லீனக்ஸில் இரண்டு குறியீடுகளும் உபயோகப் படுத்தப்படுகிறதை படத்தில் காணவும்.

GB மற்றும் GiB உபயோகப் படுத்தப்படுகிறது.

உபுண்டு லீனக்ஸில் GB மற்றும் GiB உபயோகப் படுத்தப்படுகிறது.

இதே கணக்கை உபயோகித்து, உங்கள் 4 GB பென் டிரைவ் உண்மையில் எந்த அளவிலான கோப்புகளை கொள்ளும் திறன் கொண்டது என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்களேன்! நண்பரே! நீங்களும்தான்!!

8 பதில்கள் to “மாயமாகும் மெகாபைட்டுகள்!”

  1. pkandaswamy said

    நல்ல விளக்கம். நன்றி.

    பிளாக் அகலத்தைக் குறைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    • தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
      பிளாக் அகலத்தைப் பற்றிய தங்களது ஆலோசனை மிகவும் சரியானதே.
      சிறிய கணித்திரைகள் இருந்த காலகட்டத்தில், அப்பொழுது இருந்த “தீம்” ஒன்றை உபயோகித்ததால் இப்படி இருக்கிறது.
      கூடிய விரைவில் இதை மாற்றியமைக்கிறேன்.
      தங்கள் வருகைக்கும், ஆலோசனைக்கும் மிக்க நன்றி.

  2. தெளிவான விளக்கத்துடன் புரிந்து கொள்ளும் வகையில் பதிவை வெளியிட்டதிற்கு நன்றி.

  3. அனைவருக்கும் பயனுள்ள பதிவு.பதிவு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.யாராக இருந்தாலும் எளிதாக புரிந்துகொள்ளும் விதத்தில் இருக்கின்றது.
    எனக்கு இது முன்னரே தெரிந்து இருந்தாலும் இதைப் படித்த பின் அனைவருக்கும் புரியும்படி சொல்ல நான் தெரிந்துகொண்டேன்.
    வாழ்க வளமுடன்.
    கொச்சின் தேவதாஸ்

    • இரசித்து படித்திருக்கிறீர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி. சொல்லப்பட்ட விஷயம் ஏற்கனவே தெரிந்திருந்த உங்களுக்கும் இப்பதிவு பயன் பட்டது என்பதில் மேலும் மகிழ்ச்சி!
      உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.
      நல்வாழ்த்துக்கள்.

  4. guna said

    thank you..

பின்னூட்டமொன்றை இடுக