கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

Posts Tagged ‘மின்னஞ்சல்’

தனித்தளமாக கூகிள் காண்டேக்டு மேனேஜர்

Posted by Clement மேல் ஒக்ரோபர் 6, 2008


பொதுவாக மின்னஞ்சல் தளங்களில், நமக்கு தேவையான மின்னஞ்சல் முகவரிகளை சேமித்து வைத்துக் கொள்ள வசதி இருக்கும். அதேபோல் ஜிமெயிலிலும் காண்டேக்ட்ஸ் வசதி உள்ளது. ஜிமெயில் உபயோகிப்பவர்கள் இந்த வசதியை உபயோகித்திருப்பார்கள். ஜிமெயில் தளத்தில் காண்டேக்ட்ஸ் எனும் தொடுப்பை தெரிவு செய்யும் பொழுது, படத்தில் உள்ளது போல் காண்டேக்ட்ஸ் இன்டர்ஃபேஸ் ஜிமெயிலினுள் தெரியும்.

ஜிமெயில் காண்டேக்ட்ஸ்

ஜிமெயில் காண்டேக்ட்ஸ்

இந்த காண்டேக்ட்ஸ் வசதியை ஜிமெயில் தளத்தின் வாயிலாக அல்லாமல் தனிப்பட்ட ஒரு தளமாகவும் உபயோகிக்க இயலும். கூகிளில் புகுபதிவு (sign-in) செய்தபின் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பை சொடுக்கினால் கூகிள் காண்டேக்டு மேனேஜர் (பெயரை கவனிக்கவும்: ஜிமெயில் காண்டேக்ட்ஸ் அல்ல; கூகிள் காண்டேக்டு மேனேஜர்) தனித்தளமாக தெரியும்.
http://mail.google.com/mail/contacts/ui/ContactManager
இங்கே கவனிக்க வேண்டியது கூகிளினுள் புகுபதிவு செய்யாமல் இந்த தளத்தை காண இயலாது (404 பிழை செய்தி காண்பிக்கப்படும்). இதற்கென தனியாக லாகின் ஸ்கிரீனை கூகிள் வடிவமைக்காததால் google.co.in (அல்லது கூகிள் குடும்பத்தை சார்ந்த ஒரு தளம்) இணைய பக்கத்தில் உள்ள sign-in தொடுப்பை உபயோகித்து புகுபதிவு செய்த பின் முயற்சிக்கவும்.
ஜிமெயில் காண்டேக்ட்ஸ் போலவே உள்ள இத்தளம் “கூகிள் காண்டேக்ட்ஸ்” என்ற படத்துடன் (லோகோவுடன்) காட்சியளிக்கிறது.

கூகிள் காண்டேக்டு மேனேஜர்

கூகிள் காண்டேக்டு மேனேஜர்


உபயோகித்துப் பாருங்கள்!

Posted in அலுவல், இணையம் | குறிச்சொல்லிடப்பட்டது: , | 4 Comments »

அன்புள்ள அம்மா Vs Anbulla Amma

Posted by Clement மேல் செப்ரெம்பர் 26, 2008


“எம் பிள்ளை நேத்திக்கு அவனே சாம்பார் வெச்சி சாப்பிட்டானாம் …” தன் மூக்குக் கண்ணாடியில் பிரதிபலித்த சன்னல் வெளிச்சத்தை மிஞ்சத் துடிக்கும் பிரகாசத்துடன் கூடிய முகத்துடன் என்னை அணுகிய சீத்தாலட்சுமி அம்மையாரை கூர்ந்து நோக்கினேன். அவர் கையில் ஒரு துண்டு காகிதமும் மூடியில்லாத ஒரு ஜெல் பேனாவும் இருந்தது. மேற்படிப்பிற்காக சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்த தன் மகனைப் பற்றியே அவர் பேசிக் கொண்டிருந்தார் என்பது எனக்குப் புரிந்தது. பொதுவான விசாரணைகளுக்குப் பின் தன் கோரிக்கையை என் முன் வைத்தார்.
“எனக்கு ஒரு ஈ-மெயில் அங்கிருந்தே ஓப்பன் பண்ணிட்டானாம். யாகூ மெயில் கொஞ்சம் சொல்லிக் கொடுத்தீங்கன்னா ஈ-மெயிலிலேயே அவனோட பேசிடுவேன். வீட்டுல அவன் கம்ப்யூட்டர் சும்மா தான் இருக்கு. தெனம் டெலிபோனிலே பேச முடியாது…”

எங்கள் அலுவலகத்தில் வேலை நிமித்தம் தினமும் கணினி உபயோகிப்பவர் அவர். அதனால் அவருக்கு மின்னஞ்சல் சொல்லிக் கொடுப்பது சற்று இலகுவாகத்தான் இருந்தது. இருப்பினும் தன்னிடம் இருந்த காகிதத்தில் படிப்படியாக எழுதிக்கொண்டு என்னிடம் மீண்டும் சொல்லி சரி பார்த்துக் கொண்ட பொழுது தன் மகனிடம் அவர் வைத்திருந்த அன்பையும் பாசத்தையும் உணர முடிந்தது.

எழுதி முடித்து அவர் எழ எத்தனிக்கும் பொழுது மெதுவாகக் கேட்டேன்,
“ஈ-மெயிலிலே இங்கிலீஷிலே தானே எழுதுவீங்க… நேரா பேசுகிற மாதிரி வருமா?”

படக்கென்று பதில் கூறினார்“இங்கிலீஷிலே யார் எழுதுவா? தமிழிலெதான் எழுதுவேன்.”

ஒரு வேளை தமிழில் உள்ளீடு செய்ய இவருக்கு தெரிந்திருக்குமோ? நான் தான் தெரியாமல் கேட்டு விட்டேனோ? என்று ஒரு கணம் ஹேங் ஆகி பின் சுதாரித்து, “எங்கே ‘அன்புள்ள அம்மா’ -ன்னு எழுதி காட்டுங்க பாக்கலாம்..” என்றேன். பிரகாசம் சற்றும் குறையாத முகத்தில் இப்பொழுது புதிதாக ஈ-மெயில் கற்றிருந்த பெருமையும் சேர்ந்திருக்க anbulla amma என்று தட்டச்சித்து அவருக்கே உரித்தான குதூகலத்துடன் என்னைப் பார்த்து நன்றி கூறி எழுந்தார்

சீக்கிரமாக கற்றுக் கொண்டமைக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு சிந்திக்க ஆரம்பித்தேன். பல்லாயிரக்கான மைல்களுக்கு அப்பால் வேற்று நாட்டில் இருக்கும் விக்கிரமிற்கு (இவரின் மகன்) ‘anbulla amma’ – விற்கும் ‘அன்புள்ள அம்மா’ – விற்கும் சற்று வித்தியாசம் உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் முதல் முறையாக புது தில்லி சென்று தங்கியிருந்து ஒரு வாரம் ஆகியிருந்த பொழுது, தெருவோரக் கடை விரிப்பில் ஒரு தமிழ் பத்திரிகையை கண்டவுடனே ஒரு பிரதி வாங்கின அனுபவம் உண்டு. இத்தனைக்கும் எனக்கு வாரப் பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் கிடையாது. தமிழ் இல்லாத சூழலில் தமிழைக் கண்டவுடன் ஏற்பட்ட ஈர்ப்பினால் அந்த பத்திரிகையை அன்று வாங்கினேன். சீத்தாலட்சுமி அம்மையாரும் தன் மகனுக்கு தமிழில் மின்னஞ்சல் அனுப்பினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

கணினி, மின்னஞ்சல் இவை எல்லாமே புதிதாக கற்றுக் கொள்ளும் லட்சுமணனின் பெற்றோர் போன்றோருக்கு இணையத்தில் தமிழ் கொண்டு சம்பாஷிக்க சாத்தியமா? முயன்றால் சாத்தியமே. எப்படி என்று பார்ப்போம்.

தமிழில் மின்னஞ்சல் மூலம் உரையாட இரண்டு அடிப்படை தேவைகள் உள்ளது. அவை

  1. கணினியில் தமிழ் யூனிகோடு வசதி இருக்க வேண்டும் (இந்த இடுகையை வாசிக்க முடிந்தால் அது உங்கள் கணினியில் உள்ளது என்று அர்த்தம்).
  2. தமிழ் உள்ளீடு செய்யும் வசதி வேண்டும்(கீபோர்டு மூலம் தட்டச்சிக்க)

முதலாம் தேவை உங்கள் கணினியில் இல்லை எனில் இங்கே சொடுக்கவும்.
இரண்டாம் தேவையை எப்படி பூர்த்தி செய்வது என்று இப்பொழுது பார்ப்போம்.
இணையத்தில் தமிழ் உள்ளீடு செய்ய உள்ள வழிகள் பலவற்றுள் எனக்குத் தெரிந்தவரை சுலபமானது பயர் பாக்ஸ் பிரவுசரும் தமிழ்விசை நீட்சியும் தான். இந்த வசதியை எப்படி அமைத்துக் கொள்வது என்று படிப்படியாக பார்ப்போம்.

  1. கீழே உள்ள படத்தை சொடுக்கி பயர் பாக்ஸ் பிரவுரின் தளத்திற்கு செல்லுங்கள்

    பயர் பாக்ஸ்

    பயர் பாக்ஸ்

  2. அங்கே Free Download என்ற பொத்தானை சொடுக்கி பதிவிறக்கம் செய்யுங்கள்
  3. பதிவிறக்கம் செய்யப்பட்ட செட்டப் செயலியை துவக்கி பயர் பாக்ஸ் பிரவுசரை நிறுவுங்கள்
  4. இப்பொழுது உபயோகிக்கும் பிரவுசரை மூடிவிட்டு பயர் பாக்ஸ் பிரவுசரை துவக்குங்கள்
  5. தமிழ்விசை நீட்சியை பெற இந்த சுட்டியில் https://addons.mozilla.org/en-US/firefox/addon/2994 கிளிக் செய்யுங்கள்.
  6. பின் ‘ஆட் டு பயர் பாக்ஸ்’ (Add to Firefox) என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
  7. தமிழ்விசை நிறுவியபின் பயர் பாக்ஸை ரீஸ்டார்ட் செய்யவும்.

அவ்வளவுதான்! இதில் பல வகையான் உள்ளீடு முறைகளுடன் டிரான்ஸ்லிட்டரேஷன் (அஞ்சல்) முறையும் உள்ளது. அதாவது amma அன்று தட்டச்சித்தால் (கேப்ஸ் லாக் அணைந்திருக்க வேண்டும்) அம்மா என்று உள்ளீடு ஆகும். அவ்வாறு டிரான்ஸ்லிட்டரேஷன் முறைக்கு மாறுவதற்கும் மீண்டும் ஆங்கிலத்திற்கு மாறுவதற்கும் கீபோர்டு ஷார்ட்கட்டுகள் உள்ளது
தமிழில் உள்ளீடு செய்ய alt+F8
மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற F9
இப்பொழுது இணையத்தில் தேவையான தளத்திற்கு சென்று, உள்ளீடு செய்ய வேண்டிய டெக்ஸ்ட் ஏரியாவில் கிளிக் செய்து தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ தேவைக்கேற்ப தட்டச்சு புரியுங்கள்.

சீத்தாலட்சுமி அம்மையார் தமிழில் மின்னஞ்சல் வாயிலாக உரையாட அவர் மட்டும் முயற்சி எடுத்தால் போதாது. கூடவே விக்கிரமும் (அவர் மகன்) அவருக்கு சற்று உதவ வேண்டும். இந்தப் பதிவை இருவருமாகப் படித்து, ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு முயற்சி செய்ய வேண்டும்.
முயன்று பாருங்கள்! நீங்களும் மின்னஞ்சல் மற்றும் வலைப்பதிவு போன்ற இணைய சேவைகளில் தமிழை உபயோகித்து மகிழலாம்! உங்களைச் சார்ந்தவரையும் மகிழ்விக்கலாம்!

Posted in அலுவல், இணையம், செய்முறை, மென்பொருள் | குறிச்சொல்லிடப்பட்டது: , , | 6 Comments »