கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

Archive for the ‘வைரஸ்’ Category

பென் டிரைவை “பத்திரமாக” அனுபவிக்க …

Posted by Clement மேல் செப்ரெம்பர் 9, 2008


பென் டிரைவ், மெமரி ஸ்டிக், பிளாஷ் டிரைவ், தம்ப் டிரைவ் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படும் சாதனம் இன்று நம்மிடையே வெகுவாக புழக்கத்தில் உள்ளது. நம்முடைய ஆவணங்கள், புகைப்படங்கள், நண்பரின் கணினியில் இருந்து காப்பி எடுத்த பாடல்கள், திரைப்படங்கள், அலுவலக கணினியில் டவுன்லோடு செய்த புரோக்கிராம்கள் – இப்படி பல்வேறு வகையான கோப்புகளை எடுத்துச் செல்லவும் மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளவும் இந்த பென் டிரைவ் (எனது நண்பர் சந்தரின் பாஷையில் “குச்சி”) உபயோகப்படுகிறது. இவ்வாறு நாம் இந்த குச்சியில் நமக்கு தேவையான கோப்புகளை மட்டும் பகிர்ந்து கொள்வதில்லை. கூடவே நமக்கு தேவையில்லாத அல்லது தவிற்க வேண்டிய வைரஸையும் பகிர்ந்து கொள்கிறோம்.

சரி, இவ்வாறு பென் டிரைவ் வாயிலாக வைரஸ் நமது கணினியை தாக்காமல் இருக்க என்னென்ன  வழிகளை பின் பற்றலாம்?

  • பென் டிரைவே உபயோகிக்காமல் இருக்கலாம்!
  • யூ.எஸ்.பி போர்ட்டை அரக்கு வைத்து அடைத்து விடலாம்!
  • நண்பர் தனது பென் டிரைவை நமது கணினியில் சொருக எத்தனிக்கும் பொழுது வெடுக்கென்று அதை பிடுங்கி ஜன்னல் வழியே வீசிவிட்டு “காணாம்போச்ச்ச்…” என்று கூவி அவரை மகிழ்விக்கலாம்!
  • அல்லது பின்வரும் வழிமுறையை கடைப் பிடிக்கலாம்.

பென் டிரைவை கணினியில் இணைத்தவுடனே அதில் ஒளிந்து கொண்டிருக்கும் வைரஸ் தானாக இயங்க “ஆட்டோரன்” எனும் வசதியையே(?) நம்பி இருக்கிறது. பெரும்பாலும் இது autorun.inf எனும் கோப்பு வடிவில் இருக்கும். இந்த கோப்பு மறைந்துள்ளதால் பொதுவாக நமக்கு தெரிவதில்லை. இந்த ஆட்டோரன் வசதியை தற்காலிகமாக முடக்க நாம் செய்ய வேண்டியது பென் டிரைவை சொருகும் பொழுது ஷிப்டு கீ – யை அழுத்திக் கொண்டிருப்பது தான். இவ்வாறு “பத்திரமாக” பென் டிரைவை சொருகியவுடன் நாம் முதலில் செய்ய வேண்டியது கணினியில் உள்ள வைரஸ் ஸ்கேனர் வாயிலாக பென் டிரைவை ஸ்கேன் செய்வது தான்.

  1. ஷிப்டு கீ – ஐ அழுத்திப் பிடித்துக் கொள்ளவும்.
  2. பென் டிரைவை சொருகவும்.
  3. பென் டிரைவ் டிடெக்டு ஆகும் வரை காத்திருக்கவும்.
  4. பென் டிரைவ் டிடெக்டு ஆனபின் ஷிப்டு கீ – ஐ விடவும்.
  5. வைரஸ் ஸ்கேனர் மூலம் பென் டிரைவை ஸ்கேன் செய்யவும்.

இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒன்று இருக்கிறது. பென் டிரைவை இவ்வாறு “பத்திரமாக” சொருகிய பின்னும் ஆட்டோரன் இயங்க வாய்ப்பு இருக்கிறது. மை கம்ப்யூட்டர் ஐகானை டபுள் கிளிக் செய்து, அதில் தெரியும் ரிமூவபிள் டிரைவ் ஐகானை டபுள் கிளிக் செய்யும் பொழுது, ஆட்டோரன் மீண்டும் இயங்கும். அதனால் பென் டிரைவில் உள்ளவைகளைப் பார்க்க இந்த வழியை கடைப்பிடிக்காமல் எக்ஸ்புளோரரை இயக்கி (விண்டோஸ் கீ + E) அதில் இடதுபுறமாக தெரியும் போல்டர்ஸ் பேன் – இல் ரிமூவபிள் டிரைவை தெரிவு செய்யுங்கள். அப்படியே வலது கிளிக்க செய்து வைரஸ் ஸ்கேன் செய்யுங்கள். பென் டிரைவ் சுத்தமாக உள்ளது என்று தெரிந்தபின் வலது புறம் உள்ள பேன் – இல் உங்களுக்கு தேவையான கோப்பை தெரிவு செய்யுங்கள்.

கவனிக்க வேண்டிய விஷயம் இன்னும் ஒன்று உள்ளது. ஒரு சில வைரஸ்கள் போல்டர் ஐகானை கொண்டு இருக்கும். அவ்வாறான வைரஸை போல்டர் என்று நினைத்து டபுள் கிளிக் செய்தால் வைரஸ் இயங்கி கணினியை தாக்கும். அதனால் எக்ஸ்புளோரரின் வலப்புற பேன் – இல் எந்த போல்டரையும் டபுள் கிளிக் செய்யாமல், இடப்புற பேன் – இல் இருந்தே போல்டரை சிங்கிள் கிளிக் செய்து தெரிவு செய்யவும். வைரஸ் அல்லாத உண்மையான போல்டராக இருந்தால் மட்டுமே இடப்புற பேன் – இல் தெரியும். இடப்புற பேன் – இல் தெரியாமல் வலப்புற பேன் – இல் மட்டுமே தெரியும் போல்டர் (போல்டர் போல் தோன்றுவது) உண்மையான போல்டர் அல்ல. அதை அப்படியே அழித்து விடலாம்.

மேற்கூறியுள்ள வழிமுறைகளை கடைப்பிடித்து வந்தால் பென் டிரைவை “பத்திரமாக” அனுபவித்து மகிழலாம்!

Advertisements

Posted in வைரஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: , | 14 Comments »

 
%d bloggers like this: