கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

அன்புள்ள அம்மா Vs Anbulla Amma

Posted by Clement மேல் செப்ரெம்பர் 26, 2008


“எம் பிள்ளை நேத்திக்கு அவனே சாம்பார் வெச்சி சாப்பிட்டானாம் …” தன் மூக்குக் கண்ணாடியில் பிரதிபலித்த சன்னல் வெளிச்சத்தை மிஞ்சத் துடிக்கும் பிரகாசத்துடன் கூடிய முகத்துடன் என்னை அணுகிய சீத்தாலட்சுமி அம்மையாரை கூர்ந்து நோக்கினேன். அவர் கையில் ஒரு துண்டு காகிதமும் மூடியில்லாத ஒரு ஜெல் பேனாவும் இருந்தது. மேற்படிப்பிற்காக சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்த தன் மகனைப் பற்றியே அவர் பேசிக் கொண்டிருந்தார் என்பது எனக்குப் புரிந்தது. பொதுவான விசாரணைகளுக்குப் பின் தன் கோரிக்கையை என் முன் வைத்தார்.
“எனக்கு ஒரு ஈ-மெயில் அங்கிருந்தே ஓப்பன் பண்ணிட்டானாம். யாகூ மெயில் கொஞ்சம் சொல்லிக் கொடுத்தீங்கன்னா ஈ-மெயிலிலேயே அவனோட பேசிடுவேன். வீட்டுல அவன் கம்ப்யூட்டர் சும்மா தான் இருக்கு. தெனம் டெலிபோனிலே பேச முடியாது…”

எங்கள் அலுவலகத்தில் வேலை நிமித்தம் தினமும் கணினி உபயோகிப்பவர் அவர். அதனால் அவருக்கு மின்னஞ்சல் சொல்லிக் கொடுப்பது சற்று இலகுவாகத்தான் இருந்தது. இருப்பினும் தன்னிடம் இருந்த காகிதத்தில் படிப்படியாக எழுதிக்கொண்டு என்னிடம் மீண்டும் சொல்லி சரி பார்த்துக் கொண்ட பொழுது தன் மகனிடம் அவர் வைத்திருந்த அன்பையும் பாசத்தையும் உணர முடிந்தது.

எழுதி முடித்து அவர் எழ எத்தனிக்கும் பொழுது மெதுவாகக் கேட்டேன்,
“ஈ-மெயிலிலே இங்கிலீஷிலே தானே எழுதுவீங்க… நேரா பேசுகிற மாதிரி வருமா?”

படக்கென்று பதில் கூறினார்“இங்கிலீஷிலே யார் எழுதுவா? தமிழிலெதான் எழுதுவேன்.”

ஒரு வேளை தமிழில் உள்ளீடு செய்ய இவருக்கு தெரிந்திருக்குமோ? நான் தான் தெரியாமல் கேட்டு விட்டேனோ? என்று ஒரு கணம் ஹேங் ஆகி பின் சுதாரித்து, “எங்கே ‘அன்புள்ள அம்மா’ -ன்னு எழுதி காட்டுங்க பாக்கலாம்..” என்றேன். பிரகாசம் சற்றும் குறையாத முகத்தில் இப்பொழுது புதிதாக ஈ-மெயில் கற்றிருந்த பெருமையும் சேர்ந்திருக்க anbulla amma என்று தட்டச்சித்து அவருக்கே உரித்தான குதூகலத்துடன் என்னைப் பார்த்து நன்றி கூறி எழுந்தார்

சீக்கிரமாக கற்றுக் கொண்டமைக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு சிந்திக்க ஆரம்பித்தேன். பல்லாயிரக்கான மைல்களுக்கு அப்பால் வேற்று நாட்டில் இருக்கும் விக்கிரமிற்கு (இவரின் மகன்) ‘anbulla amma’ – விற்கும் ‘அன்புள்ள அம்மா’ – விற்கும் சற்று வித்தியாசம் உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் முதல் முறையாக புது தில்லி சென்று தங்கியிருந்து ஒரு வாரம் ஆகியிருந்த பொழுது, தெருவோரக் கடை விரிப்பில் ஒரு தமிழ் பத்திரிகையை கண்டவுடனே ஒரு பிரதி வாங்கின அனுபவம் உண்டு. இத்தனைக்கும் எனக்கு வாரப் பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் கிடையாது. தமிழ் இல்லாத சூழலில் தமிழைக் கண்டவுடன் ஏற்பட்ட ஈர்ப்பினால் அந்த பத்திரிகையை அன்று வாங்கினேன். சீத்தாலட்சுமி அம்மையாரும் தன் மகனுக்கு தமிழில் மின்னஞ்சல் அனுப்பினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

கணினி, மின்னஞ்சல் இவை எல்லாமே புதிதாக கற்றுக் கொள்ளும் லட்சுமணனின் பெற்றோர் போன்றோருக்கு இணையத்தில் தமிழ் கொண்டு சம்பாஷிக்க சாத்தியமா? முயன்றால் சாத்தியமே. எப்படி என்று பார்ப்போம்.

தமிழில் மின்னஞ்சல் மூலம் உரையாட இரண்டு அடிப்படை தேவைகள் உள்ளது. அவை

 1. கணினியில் தமிழ் யூனிகோடு வசதி இருக்க வேண்டும் (இந்த இடுகையை வாசிக்க முடிந்தால் அது உங்கள் கணினியில் உள்ளது என்று அர்த்தம்).
 2. தமிழ் உள்ளீடு செய்யும் வசதி வேண்டும்(கீபோர்டு மூலம் தட்டச்சிக்க)

முதலாம் தேவை உங்கள் கணினியில் இல்லை எனில் இங்கே சொடுக்கவும்.
இரண்டாம் தேவையை எப்படி பூர்த்தி செய்வது என்று இப்பொழுது பார்ப்போம்.
இணையத்தில் தமிழ் உள்ளீடு செய்ய உள்ள வழிகள் பலவற்றுள் எனக்குத் தெரிந்தவரை சுலபமானது பயர் பாக்ஸ் பிரவுசரும் தமிழ்விசை நீட்சியும் தான். இந்த வசதியை எப்படி அமைத்துக் கொள்வது என்று படிப்படியாக பார்ப்போம்.

 1. கீழே உள்ள படத்தை சொடுக்கி பயர் பாக்ஸ் பிரவுரின் தளத்திற்கு செல்லுங்கள்

  பயர் பாக்ஸ்

  பயர் பாக்ஸ்

 2. அங்கே Free Download என்ற பொத்தானை சொடுக்கி பதிவிறக்கம் செய்யுங்கள்
 3. பதிவிறக்கம் செய்யப்பட்ட செட்டப் செயலியை துவக்கி பயர் பாக்ஸ் பிரவுசரை நிறுவுங்கள்
 4. இப்பொழுது உபயோகிக்கும் பிரவுசரை மூடிவிட்டு பயர் பாக்ஸ் பிரவுசரை துவக்குங்கள்
 5. தமிழ்விசை நீட்சியை பெற இந்த சுட்டியில் https://addons.mozilla.org/en-US/firefox/addon/2994 கிளிக் செய்யுங்கள்.
 6. பின் ‘ஆட் டு பயர் பாக்ஸ்’ (Add to Firefox) என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
 7. தமிழ்விசை நிறுவியபின் பயர் பாக்ஸை ரீஸ்டார்ட் செய்யவும்.

அவ்வளவுதான்! இதில் பல வகையான் உள்ளீடு முறைகளுடன் டிரான்ஸ்லிட்டரேஷன் (அஞ்சல்) முறையும் உள்ளது. அதாவது amma அன்று தட்டச்சித்தால் (கேப்ஸ் லாக் அணைந்திருக்க வேண்டும்) அம்மா என்று உள்ளீடு ஆகும். அவ்வாறு டிரான்ஸ்லிட்டரேஷன் முறைக்கு மாறுவதற்கும் மீண்டும் ஆங்கிலத்திற்கு மாறுவதற்கும் கீபோர்டு ஷார்ட்கட்டுகள் உள்ளது
தமிழில் உள்ளீடு செய்ய alt+F8
மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற F9
இப்பொழுது இணையத்தில் தேவையான தளத்திற்கு சென்று, உள்ளீடு செய்ய வேண்டிய டெக்ஸ்ட் ஏரியாவில் கிளிக் செய்து தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ தேவைக்கேற்ப தட்டச்சு புரியுங்கள்.

சீத்தாலட்சுமி அம்மையார் தமிழில் மின்னஞ்சல் வாயிலாக உரையாட அவர் மட்டும் முயற்சி எடுத்தால் போதாது. கூடவே விக்கிரமும் (அவர் மகன்) அவருக்கு சற்று உதவ வேண்டும். இந்தப் பதிவை இருவருமாகப் படித்து, ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு முயற்சி செய்ய வேண்டும்.
முயன்று பாருங்கள்! நீங்களும் மின்னஞ்சல் மற்றும் வலைப்பதிவு போன்ற இணைய சேவைகளில் தமிழை உபயோகித்து மகிழலாம்! உங்களைச் சார்ந்தவரையும் மகிழ்விக்கலாம்!

Advertisements

6 பதில்கள் to “அன்புள்ள அம்மா Vs Anbulla Amma”

 1. தங்களுடையவலைப்பூ வாசித்தேன். நிஜமாகவே அம்மாக்களுக்கும் மகன்களுக்கும் இத்தகவல் தேனாகத்தான் இருந்திருக்கும் என்பதில் ஏதும் ஐயமில்லை. இருப்பினும் உங்களுடைய தகவல் அலுவலகத்தில் பணிபுரியும் அம்மாக்களுக்கு வேண்டுமானால் சுலபமாக (?) இருக்கக்கூடும். ஆனால் நிறைய அம்மாக்கள் கற்றுக்கொள்ள விழைந்து பயந்துப்போகிற மாதிரி இல்லாமல் சற்று சுலபமாக தகவல் தந்தால் நன்றாக இருக்கும் என்று படுகிறது. உங்கலாம் முடியும். நுட்ப வார்த்தைகளைத் தவிர்த்து முயற்சித்துப் பாருங்களேன்….

 2. A.HARI said

  Thanks for your informative post explaining how to type in tamil.

  I think you can give technical terms in english also for better understanding.

  Pl post more frequently.

  Can U think of a similar blog in english also as it will have more traffic?

  Hari

 3. அமிர்தராஜ் said

  ஹரி அவர்களுக்கு,
  // I think you can give technical terms in english also for better understanding.
  நான் சொல்ல வரும் விஷயம் வாசகர்களுக்கு புரியவேண்டும் என்பதே என் அவா. “நீட்சி” என்பதை “எக்ஸ்டென்ஷன்” என்றும் “உள்ளீடு” என்பதை “இன்புட்” என்றும் எழுதியிருந்தால் ஒருவேளை உங்களுக்கு புரியும்படி இருந்திருக்கும். என்று நினைக்கிறேன். இனி எழுதும் பொழுது இவற்றை நினைவில் கொள்கிறேன்.
  //Pl post more frequently.
  முயற்சிக்கிறேன்.
  //Can U think of a similar blog in english also as it will have more traffic?
  இப்போழுதிற்கு அவ்வாறான எண்ணம் இல்லை.

  தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.

 4. சரவனன் said

  மிக அருமையான வலைபூ. மிக்க நன்றி.

 5. இரவிசங்கர் said

  தங்கள் பதிலுக்கு
  நன்றி தோழர் அமிர்தராஜ்,

  ஆனால் என்னால் Transliterate செய்ய இயலவில்லை.. தட்டச்சு செய்யும் போது சில வார்த்தைகள் சரியாக இல்லை.
  இந்த வார்த்தைகளை http://www.google.com/transliterate/indic/Tamil
  மூலம் தட்டச்சு செய்தேன். இதில் எழுத்துக்களை மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது. இதை உங்கள் வலை பதிவில் தெரிய செய்தால் அனைவரும் பயனுறுவர்.
  எனது வலை பதிவு முழுமையடையவில்லை, முழுமையடைந்ததும் தெரியபடுத்துகிறேன்.

  நன்றி
  இரவிசங்கர்

 6. இரவிசங்கர் அவர்களுக்கு,
  தங்களின் செய்திக்கு நன்றி. கூகிளின் இன்டிக் டிரான்ஸ்லிட்டரேஷன் பக்கத்தில் தட்டச்சு செய்து அதை காப்பி செய்து, தேவையான இடத்தில் பேஸ்டு செய்து கொள்ளலாம். பயர் பாக்ஸின் தமிழ்விசை உபயோகிக்கும் பொழுது, இந்த காப்பி பேஸ்டு வேலை மிச்சம். தேவையான இடத்தில் அப்படியே தட்டச்சு செய்யலாம். எந்த எழுத்திற்கு எந்த விசையை அழுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வது முக்கியம். இது போனடிக் முறையில் அமைந்துள்ளதால், பெரும்பாலும் எழுத்துக்களை உச்சரிப்பது போலவே ஆங்கில விசைகளை அழுத்த வேண்டியிருக்கும். ஒரு சில விதி விலக்குகள்
  ஃ – q
  ந – wa
  க்ஷ் – x
  ழ் – z
  நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உபயோகிப்பவராக இருந்தால் என்.எச்.எம்.ரைட்டரை உபயோகப்படுத்திப் பாருங்கள்.
  உங்கள் வலைப்பதிவு விரைவில் முழுமையடைய வாழ்த்துக்கள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: